tamilnadu

img

கடும் நெருக்கடியில் பாத்திர உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய- மாநில அரசுகள் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. இந்த ஊரடங்கால்  மதுரையில் பித்தளை, சில்வர் ,அலுமினியப் பாத்திரங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து செல்லூர் பகுதியில் சில்வர் பட்டறை வைத்துள்ள சுப்ரமணியம் என்பவர்  கூறியதாவது:மதுரை மாவட்டத்தில் செல்லூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள், முனிச்சாலை, யா. ஒத்தக்கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்வர் பட்டறைகள் உள்ளன. இதில் ஒரு பட்டறைக்கு குறைந்த பட்சம் 10 முதல் அதிகபட்சமாக 50 தொழிலாளர்கள் வரை வேலைபார்த்து வருகிறார்கள். இவர்கள் தினக்கூலி மற்றும் பீஸ் காண்ட்ராக்ட் என்ற அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள். ஒரு தொழிலாளிக்கு குறைந்தபட்சம் 350 முதல் அதிகபட்சம் 500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை இருக்கும். வார இறுதியில் சம்பளம் பெற்றுச் செல்வார்கள்.

ஊரடங்கால்  உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி  தொழிலாளர்களும் மிகப்பெரும் பாதிப்பை  சந்தித்துள்ளனர். தினசரி 700 கிலோ முதல் 800 கிலோ வரை பாத்திரங்கள்   உற்பத்தி  செய்யப்படும். தற்போது உற்பத்தியின்றி உள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட பாத்திரங்கள், கடைகள் திறக்கப்படாததால் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் கடும்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேலைகள் நடைபெறாததால் தொழிலாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் . அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே வாரத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளோம் .இது உற்பத்தியாளர்களுக்கு கடும் நெருக்கடியான காலகட்டம். இந்த நெருக்கடி காலத்திலும் கூட தொழிலாளிகளுக்கு எங்களால் இயன்ற பண உதவியை செய்து வருகின்றோம். எங்களை விட சிறு உற்பத்தியாளர்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

மின் கட்டணத்தை ரத்து செய்க

வங்கிக்கடன்களை மூன்று மாதங்கள் கழித்து செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்று மாதங்கள் கழித்து வட்டியுடன் சேர்த்து தொகையை கட்ட வேண்டும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன.  இது ஏற்புடையதல்ல. ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ள நாங்கள் மூன்று மாதம் கழித்து கட்டப்படும் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும் என்பது மீண்டும் எங்களை கடன் சுமைக்கு கொண்டு செல்லும். எனவே மூன்று மாதம் கழித்து கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்து காலநீட்டிப்பு செய்ய வேண்டும்.

 கடந்த மாதம் கட்டப்பட்ட மின்கட்டணத்தொகையையே இந்த மாதம் கட்ட வேண்டும் என்று மாநில அரசு கூறியுள்ளது. பட்டறைகள் இயங்காத நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிறு உற்பத்தியாளர்கள்  உள்ளனர். இந்நிலையில் தொழிற்சாலைகள் இயங்கும் வரை  மின்கட்டணத்தை அரசு  ரத்து செய்திட வேண்டும்.  இதுபோன்ற காலங்களில் அரசு  சில சலுகைகளை அளித்தால் எங்களைப் போன்ற சிறு - குறு உற்பத்தியாளர்கள் பெரும் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்று கூறினார்.

அரசு வங்கிகளில் கடனுதவி வழங்கிடுக

      அலுமினிய பாத்திர சிறு உற்பத்தியாளர் மகாலிங்கம் என்பவர் கூறியதாவது: கடந்த 22 நாட்களுக்கு மேலாக பொருட்களை கொண்டு செல்லவோ அல்லது உற்பத்தி செய்யவோ இந்தப் பொருளுக்கான மூலக்கூறுகளை தயாரிக்கவோ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மதுரையில் 200க்கும் மேற்பட்ட அலுமினிய பொருட்கள் தயாரிப்பு மற்றும் அதை சார்ந்து பல்வேறு சிறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் குறைந்தபட்சம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு 300 முதல் 500 ரூபாய் வரை  கூலி வழங்கி வருகிறோம். தற்சமயம் யாரும் வேலைக்கு வர முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு வாரவாரம் ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வருகிறோம்.

இந்த பணமும் கூட வெளியில் வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இதில் பட்டறை நடத்தும் இடத்திற்கான வாடகையும் உள்ளது. இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் இந்த காலகட்டங்களில் தொழிலாளர்களையும் தொழிலையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரு முயற்சியோடு அரசுகளின் அறிவிப்பை ஏற்று நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இவற்றை ஈடுகட்டும் வகையில் அரசு ,வங்கிகளில் நிவாரண காலத்திற்கான கடன் உதவியை வழங்கி உதவிட வேண்டும். தனியார் வங்கிகள் கடன்களை வழங்க முன் வருகிறது. ஆனால் கட்ட முடியாத காலத்திற்கும் அவர்கள் வட்டியுடன் சேர்த்துத்தான் கடனை வசூலிப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் அரசு சிறு உற்பத்தியாளர்களை  பாதுகாத்திட அரசு வங்கிகளில் கடனுதவி அளிக்க வேண்டும் என்று கூறினார்.

நலவாரியம் மூலம் உதவித்தொகை

பித்தளைப் பாத்திரம் செய்யும் தொழிலாளி மாரிமுத்து என்பவர் கூறியதவாது: பித்தளை பாத்திரம் உற்பத்தி செய்வதில் பல்வேறு தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். மதுரையில்  50-க்கும் மேற்பட்ட பித்தளை பாத்திரம் உற்பத்தி நிறுவனங்கள் சிறிய அளவில் செயல்பட்டு வருகின்றன. இதில் பத்துக்கும் மேற்பட்ட பட்டறைகளில் ஒரு பட்டறைக்கு 30 முதல் 40 பேர் வரை டிங்கர், வெல்டர், ரன்னர், பாலிஷ் போடுபவர், அலுமினியம் பூசுபவர் என்று பலரும் பணியாற்றுகிறார்கள். பித்தளைப் பாத்திரத் தொழிலாளர்கள்  அதிகபட்சம் 800 ரூபாய் முதல்  குறைந்தபட்சம் ரூ. 400 வரை தினக்கூலி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மார்ச் 22 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின் யாரும் வேலைக்கு செல்லவில்லை .சில பட்டறை உரிமையாளர்கள் , தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 500 முதல் 600 ரூபாய் வரை வழங்கி வருகிறார்கள் .எங்களுடைய பட்டறை உரிமையாளர் வெளியூரில் இருப்பதால் எங்களுக்கு பணம் வழங்கப்படவில்லை.

தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றை வழங்கினார்கள்.  கடுமையான நெருக்கடியில்தான் எங்களுடைய வாழ்க்கை சூழ்நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகள்  மக்களுடைய அத்தியாவசிய தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்துவிட்டு இதுபோன்ற ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருந்தால் பலதரப்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு என்று நல வாரியம் மூலமாக ஒரு சிறு தொகையினையும் அத்தியாவசிய பொருட்களும் இலவசமாக  அரசு வழங்கி வருகின்றது. அதேபோல் எங்களைப்போன்ற பாத்திர தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலமாக உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்று கூறினார்.

தொழிலாளர்களை அரசு பாதுகாக்க கோரிக்கை

மேலும் பலர் கூறுகையில், பட்டறைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை நலவாரியத்தில் பதிவு செய்ய வைத்துள்ளோம். ஆனால் அதைப் புதுப்பிக்காமல் விட்டு விட்டதால் எங்களுக்கு பணம் இல்லை என்று அரசுத் தரப்பில் கூறுகின்றனர். அதை தவிர்த்து எங்களுக்கும் அரசு வழங்கும் உதவித்தொகை கிடைத்திட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தொழிலாளிக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்தால் மட்டும்தான் இன்றைய காலகட்டத்தில் குடும்பத்தில் உள்ள நபர்களின் பசியினை போக்க முடியும்.

மதுரை, தேனி மாவட்டங்களில்  தற்போது சித்திரை திருவிழா துவங்கிடும் நேரம் .அதேபோல் சித்திரை முடிந்தவுடன் வைகாசி முகூர்த்த நாட்களாக இருக்கும். இதுபோன்ற சீசன் நேரங்களில் அதிகமான முறையில் பாத்திரங்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் .இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் அரசு கருத்தில் கொண்டு எங்களைப்போன்ற தொழிலாளர்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

செய்தி, படங்கள்: ஜெ. பொன்மாறன்.

 

;